தரம்சாலா கல்லூரி மாணவி மரண வழக்கில் திருப்பம்... பாலியல் துன்புறுத்தல்; ராகிங் கொடுமை... பேராசிரியருக்கு இடைக்கால ஜாமீன்!
இமாச்சலப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரம்சாலா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி, கடந்த டிசம்பர் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு ராகிங் மற்றும் பாலியல் அத்துமீறல்களே காரணம் எனப் புகார் எழுந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது.

உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின்படி, கல்லூரியில் பயிலும் மூன்று மாணவிகள் அந்த மாணவியைக் கடுமையாகத் தாக்கி, மிரட்டி ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். ராகிங் கொடுமைகள் ஒருபுறம் இருக்க, பேராசிரியர் அசோக் குமார் அந்த மாணவிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார்.தொடர் சித்திரவதைகளால் மனதளவில் உடைந்த அந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்தது. லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பேராசிரியர் அசோக் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியருக்கு ₹25,000 தனிநபர் பிணைத் தொகை அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர, உயிரிழந்த மாணவி அளித்த வாக்குமூல வீடியோவை முக்கிய ஆதாரமாகச் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து: பல்கலைக்கழக மானியக் குழு இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது. உயர்கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்ட தனிக் குழு அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த மூன்று மாணவிகள் மீதான விசாரணை மற்றும் அவர்களின் கல்வி இடைநீக்கம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
