3 வதும் பெண் குழந்தை ... வீட்டிலேயே கருக்கலைப்பு முயற்சியில் மனைவி பலி !
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா (26) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ரம்யா மூன்றாவதாக மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்யா மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கண்ணன் உறவினர்களிடம் கூறினார். ரம்யாவின் மரணத்தில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. கண்ணனுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இதனால், இந்த முறை பெண் குழந்தை பிறக்கக் கூடாது என்று அவர் நினைத்துள்ளார். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிய அவர் சட்டவிரோத செயலில் இறங்கியுள்ளார். சேலம் ஓமலூரைச் சேர்ந்த நர்ஸ் சுகன்யா (35) மற்றும் புரோக்கர் வனிதா (35) ஆகியோருடன் அவர் பேசியுள்ளார்.

நர்ஸ் உதவியுடன் ஸ்கேன் செய்து பார்த்ததில், அதுவும் பெண் குழந்தை எனத் தெரியவந்தது. இதனால், கண்ணன், நர்ஸ் மற்றும் புரோக்கர் மூவரும் சேர்ந்து வீட்டிலேயே ரம்யாவுக்கு கருக்கலைப்பு செய்யத் திட்டம் தீட்டினர். சட்டவிரோத கருக்கலைப்பின் போது ரம்யாவுக்கு அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டது. பயந்துபோன மூவரும் ரம்யாவை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரம்யா வழியிலேயே உயிரிழந்தார். மாடிப்படி நாடகத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சட்டவிரோத கருக்கலைப்பு மூலம் மனைவியை கொன்ற வழக்கில் கண்ணன், நர்ஸ், புரோக்கர் என மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
