சி.பி.ஐ. பெயரில் டிஜிட்டல் அரெஸ்ட்… நெல்லையில் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் சி.பி.ஐ.யில் இருந்து பேசுவதாக கூறினர். உங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் என்றும் கூறி அச்சுறுத்தினர். தொடர்ந்து வீடியோ காலில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என சொல்லி, அந்த நபரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து நம்ப வைத்தனர்.

பின்னர் சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதாக கூறி, அந்த நபரின் வங்கி சேமிப்பு பணத்தை அவர்கள் சொன்ன கணக்குக்கு அனுப்ப வைத்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அந்த பணம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஹென்றி ஜோன்ஸ் என்பவரின் வங்கி கணக்குக்கு சென்றது தெரியவந்தது. அவர் ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்டு தனது வங்கி கணக்கை மற்றொருவருக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஹென்றி ஜோன்ஸை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்குகளை வாடகைக்கு கொடுத்தாலோ, வாங்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பது இந்திய சட்டத்தில் இல்லை என்றும், பொதுமக்கள் இவ்வகை மோசடிகளில் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற இலவச எண்ணிலோ அல்லது cybercrime.gov.in இணையதளத்திலோ புகார் அளிக்கலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
