கோவில் பணிக்கு இடையூறு... நடிகர் ஜி.பி.முத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

 
 கோவில் பணிக்கு இடையூறு... நடிகர் ஜி.பி.முத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கோவில் கட்டுமான பணிக்கு இடையூறு செய்வதாக கூறி நடிகர் ஜி.பி.முத்துக்கு எதிராக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரம் தெருவைச் சேர்ந்தவர் நடிகர் ஜி.பி.முத்து. சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் புகழ்பெற்ற இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

ஜி.பி.முத்து வீட்டின் அருகில் உச்சினிமாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கட்டும் வகையில், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுப்பித்துக் கட்டப்படும் கோவில் கட்டிடமானது தனது வீட்டுக்கும், தெருவுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்படுவதாகவும், எனவே கோயில் கட்டுமான வேலைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு வழங்கினார். 

 ஜி.பி.முத்து

இதையடுத்து கோவில் கட்டுமான வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், கோவில் கட்டுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் ஜி.பி.முத்துவின் வீட்டை நேற்று காலையில் திடீரென்று முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ஜி.பி.முத்து, அவருடைய தந்தை கணேசன் ஆகியோர் பதிலுக்கு ஊர் மக்களிடம் சில ஆவணங்களை காண்பித்தவாறு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் அங்கு விரைந்து சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கோவில் கட்டுமான பணிக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது, நில விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர்.

அப்போது ஜி.பி.முத்து, அவருடைய தந்தை கணேசன் ஆகியோர் போலீசாரிடமும் சில ஆவணங்களைக் காண்பித்து வாக்குவாதம் செய்தனர். ‘‘எனக்கு நீதி கிடைக்கவில்லையெனில் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்வேன்’’ என்று ஜி.பி.முத்து ஆவேசத்துடன் கூறினார். அவரை போலீசார் சமாதானப்படுத்தினர். 

தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது