இன்று திருப்பூரில் திமுக மகளிரணி மாநாடு... ஸ்டாலின் பங்கேற்பு.. 2 லட்சம் மகளிர்... பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்!
இன்று டிசம்பர் 29ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு மிகவும் விமரிசையாகத் தொடங்க உள்ளது. 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாடு திருப்பூரில் காரணம்பேட்டை, பல்லடத்தில் இன்று மாலை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி வரவேற்புரை ஆற்ற, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். 30 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடலும், 140 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த (கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல்) 39 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாகப் பெண்களுக்குத் தனித்தனி வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்குக் கருப்பு-சிவப்பு நிறச் சுடிதார் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கருப்பு-சிவப்பு நிறச் சேலைகள் வழங்கப்பட்டுள்ளன.
மொபைல் கழிப்பறைகள், குடிநீர், மருத்துவக் குழு மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநாட்டிற்கு வரும் பெண்களுக்குச் சிற்றுண்டி மற்றும் இரவு உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த மாநாடு கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்களைத் தொடர்ந்து, பெண்களுக்கான புதிய மற்றும் முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் இந்த மேடையில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தனிப்பாதை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
