இன்றிரவு பார்க்க தவறாதீங்க... ஜெமினிட் விண்கல் பொழிவு நிகழ்த்தும் வான வேடிக்கை!
அனைத்து வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு! இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் கண்கவர் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ஜெமினிட் விண்கல் பொழிவு (Geminid Meteor Shower) இன்று இரவு (டிசம்பர் 13) மற்றும் நாளை (டிசம்பர் 14) இரவு உச்சத்தை அடையவுள்ளது. இந்த அபூர்வமான வான வேடிக்கையைக் காணத் தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஜெமினிட் விண்கல் பொழிவு என்றால் என்ன?
விண்கல் பொழிவு என்பது, விண்கற்களின் எச்சங்கள் புவியின் வளிமண்டலத்தில் நுழையும்போது உராய்வினால் எரிந்து பிரகாசமான கீற்றுகளாகத் தோன்றுவதாகும். ஜெமினிட் விண்கல் பொழிவு என்பது, 3200 ஃபேத்தன் (Phaethon) என்ற சிறுகோளில் (asteroid) இருந்து வெளிப்படும் துகள்கள் காரணமாக ஏற்படுவதாகும்.
இன்று டிசம்பர் 13ம் தேதி இரவு முதல் நாளை டிசம்பர் 14 அதிகாலை சுமார் இரவு 1 மணி முதல் 3 மணி வரை பார்க்க முடியும். ஜெமினிட் விண்கல் பொழிவு உச்சத்தில் இருக்கும் போது, ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 120 விண்கற்கள் வரை வானில் பொழிய வாய்ப்புள்ளது. இதுவே இந்த ஆண்டின் மிகச் சிறந்த விண்கல் பொழிவாகும். இந்த விண்கற்கள் 'ஜெமினி' (மிதுனம்) நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வருவதாகத் தோன்றும்.

இந்த வானியல் அற்புதத்தைக் காணப் பெரிய தொலைநோக்கிகள் அல்லது உபகரணங்கள் தேவையில்லை. வெறும் கண்களாலேயே தெளிவாகக் காண முடியும். மிகவும் இருண்ட பகுதியில் இருந்து இரவு 11 மணிக்கு மேல் பார்ப்பது நல்லது. இந்த முறை சந்திரன் மிகவும் குறைவாகவே ஒளிருவதால், வானம் மிகவும் இருண்டு காணப்படும். இது விண்கல் பொழிவை மேலும் தெளிவாகக் காண உதவும்.
நகரின் ஒளி மாசு இல்லாத, திறந்தவெளிப் பகுதிகளுக்குச் சென்று, வடகிழக்கு திசையை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் பொறுமையாக வானத்தைப் பார்த்தால், விண்கல் பொழிவைக் கண்டு ரசிக்கலாம். வானியல் மீது ஆர்வம் கொண்ட பொதுமக்கள், குடும்பத்துடன் இந்த அரிய மற்றும் அற்புதமான நிகழ்வை இரவில் கண்டு மகிழலாம் என வானியல் ஆய்வாளர்கள் ஊக்கமளிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
