தலைக்கணம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது... துணை முதல்வர் உதயநிதி காட்டம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும்” எனவும் “மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாடு ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?” எனவும் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனையடுத்து, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, த.வெ.க தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என தமிழ்நாட்டை மிரட்டுவதா? என காட்டத்துடன் தனது கேள்விகளை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் ” தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு பேசுவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது. எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது. நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என தமிழ்நாட்டை மிரட்டுவதா? தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் – சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும். மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் மத்திய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கணம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது” என காட்டத்துடன் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
