நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. பெயர் விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?!
தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலைத் திருத்தி அமைக்கும் பணிகளின் ஒரு முக்கியக் கட்டமாக நாளை டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு, தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியமாகும். உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in அல்லது தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திற்குச் சென்று, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC Number) உள்ளீடு செய்து எளிதாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் தேவைப்பட்டாலோ பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் 'படிவம் 6'-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கான படிவங்களை இணையதளம் மூலமாகச் சமர்ப்பிக்கலாம் அல்லது உங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) நேரடியாகப் பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம். ஒவ்வொரு அலுவலரிடமும் தலா 50 படிவங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவு உள்ளவர்களின் விவரங்கள் அடங்கிய 'ஏ.எஸ்.டி' (ASD) பட்டியல் அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் இந்தப் பட்டியலையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. வரைவுப் பட்டியலில் உங்கள் பெயரோ அல்லது விவரங்களோ தவறாக இருந்தால், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் திருத்தங்கள் செய்யவும் வரும் டிசம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாத காலத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளால் முறையாகப் பரிசீலனை செய்யப்படும். தகுதியான மாற்றங்கள் மற்றும் புதிய சேர்க்கைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, நாளை வெளியாகும் பட்டியலில் உங்கள் பெயரின் நிலையைச் சரிபார்த்து, ஜனநாயகக் கடமையாற்றத் தயாராகுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
