இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.1.25 கோடி மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்குக் கடத்திச் செல்ல முயன்ற ரூ.1.25 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள், தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாரால் திருச்செந்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினம் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்தல் நடைபெறுவதாக, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையிலான போலீசார் குழுவினர் நேற்று அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனையிட்டபோது, கடற்கரையில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகளைக் கண்டுபிடித்தனர். இதில், உயர் ரக மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருந்தன. குறிப்பாக, Pregab Tablets (7,50,000 மாத்திரைகள்) மற்றும் Disulfiram Tablets (77,900 மாத்திரைகள்) உள்ளிட்ட மருந்துகள் அதிக அளவில் இருந்தன. மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின் மதிப்பு ரூ.1.25 கோடி ஆகும்.

போலீசாரின் வருகையைக் கண்டதும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படவிருந்த படகுடன் கடத்தல்காரர்கள் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த இந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகள் அனைத்தும் மேல் விசாரணைக்காக சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தப் பறிமுதல் சம்பவம், கடலோரப் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதில் கியூ பிரிவு போலீசாரின் தொடர் கண்காணிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
