அதிகாலையில் சோகம்... கார் மோதி கோர விபத்து; 5 பெண்கள் பலி!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள 'ஏக்த சவுக்' அருகே இன்று அதிகாலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழுவினர், ஜபல்பூரில் சாலைத் தூய்மைப் பணிக்காக வந்திருந்தனர். இன்று காலை அவர்கள் பணியிடையே சாலையோரம் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதியது.

விபத்து நடந்த இடத்திலேயே இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வழியிலேயே மேலும் 3 பெண்கள் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மேலும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகப் போலீஸ் சூப்பிரெண்டு சூர்யகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய டிரைவர் தீபக் சோனி என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இருப்பினும், காரின் உரிமையாளரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
