“ஜோதியாய் பிரகாசித்த ஈசன்” - திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது! விண் அதிர “அரோகரா” கோஷமிட்ட பக்தர்கள்!
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்று (டிசம்பர் 3, 2025) மாலை ஏற்றப்பட்டது. அடி, முடி காண முடியாத ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்த சிவனே மலையாக வீற்றிருக்கும் இந்தத் தலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஈசனை வணங்கினர்.
கடந்த நவம்பர் 24ம் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் தினமும் காலையிலும் மாலையிலும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி, இன்று அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.

அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய் மற்றும் காடா துணிகள் நேற்றே மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பிரமாண்ட தீபம் தயார் செய்யப்பட்ட பிறகு, மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கின.
மகா தீபத்தைத் தரிசனம் செய்வதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர். கோயில் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் அலைமோதியது. மாலையில் பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் அமர்ந்து மகா தீபத்தைக் காண ஆயத்தமானார்கள். அதனையடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம் ஆடியபடியே தங்கக் கொடிமரத்தின் முன்னால், மலையை நோக்கியபடி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்த சரியான நேரம், மாலை 6 மணிக்குக் கொடிமரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அகண்ட தீபத்தில் இருந்து பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, மலையுச்சியில் தீபம் ஏற்றத் தயாராக இருந்த பக்தர்களுக்குக் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2,668 அடி உயர அண்ணாமலையார் உச்சியில் பிரமாண்ட மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவரும், "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்தை எழுப்பியபடியே மகாதீபத்தை தரிசித்து வணங்கினர்.
திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் பக்தர்கள், மகா தீபம் ஏற்றிய பின்னரே தங்கள் வீடுகளிலும் வியாபார நிறுவனங்களிலும் மின்விளக்குகளையும், வீட்டின் முன்பாக அகல் விளக்குகளையும் ஏற்றி வழிபட்டனர். இந்தத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகரைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
