பறக்கும் படை 'வேட்டை'... வேனில் சிக்கிய 5 கோடி நகை!
தேர்தல் நெருங்கும் வேளையில் புதுச்சேரியில் பறக்கும் படையினரின் அதிரடிச் சோதனையில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சாரம் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு வேனை மறித்துச் சோதனை செய்தனர்.

அந்த வேனில் இருந்த 5 பெரிய பெட்டிகளைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கட்டுக் கட்டாகத் தங்க நகைகள் இருந்தன. விசாரணையில், அந்த நகைகள் புதுச்சேரியில் இருந்து சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இருப்பினும், அந்த நகைகளைத் தகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பத்திரங்கள் அப்போது இல்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 5 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாதுகாப்பாகக் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். "தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி நகைகளைக் கொண்டு செல்லக் கூடாது. நகைகளுக்கான ரசீதுகள் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சரிபார்த்த பிறகு, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையிலான நகைகள் சிக்கியுள்ளது புதுச்சேரி மற்றும் சென்னை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
