தேர்தல் 2026... மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு விறுவிறுப்பு!
தமிழகத்தைப் போலவே புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 'விவிபாட்' (VVPAT) இயந்திரங்களைச் சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பும் முதற்கட்டக் குலுக்கல் முறை ஒதுக்கீடு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒதுக்கீட்டுப் பணியின்போது, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் நேரில் அழைக்கப்பட்டிருந்தனர். கணினி மூலம் சீரற்ற முறையில் (Randomization) இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை எந்தெந்தத் தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இயந்திரங்களின் முழுப் பட்டியல் மற்றும் அவற்றின் எண்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் உடனடியாக வழங்கப்பட்டன. இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பே இல்லை என்பதைத் தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பலத்த பாதுகாப்பு நிறைந்த 'ஸ்ட்ராங் ரூம்' (Strong Room) எனப்படும் காப்பகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு இரண்டாம் கட்டக் குலுக்கல் நடத்தப்படும். அப்போதுதான், எந்த இயந்திரம் எந்த வாக்குச்சாவடிக்கு (Polling Station) அனுப்பப்படும் என்பது இறுதி செய்யப்படும். "தேர்தல் நடைமுறையில் துளிக்கூடச் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்" எனத் தேர்தல் ஆணையம் தனது செய்திக்குறிப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
