"வேட்பாளர்கள் உள்ளே வரக் கூடாது": அடிப்படை வசதி கோரி ஜெயங்கொண்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்!

 
வேட்பாளர்கள் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல்  ஏப்ரல் 23ம் தேதி (2026) நடைபெற உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் திமுக, பாமக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 21 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று (ஏப். 09) கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தைச் சேர்ந்த பிச்சனூர் ஊராட்சியில் மக்கள் ஒட்டியுள்ள ஒரு சுவரொட்டி வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சனூர் ஊராட்சியின் 5 மற்றும் 6-வது வார்டு பொதுமக்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டியில், "வேட்பாளர்கள் யாரும் வாக்குக் கேட்டு உள்ளே வர வேண்டாம்" என அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சாலை வசதி, பாதுகாப்பான குடிநீர், மின்விளக்கு மற்றும் கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் அதில் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள அப்பகுதி மக்கள், வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டி ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்தப் போராட்டம் அவர்களது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள், பிச்சனூர் ஊராட்சி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைத் தேர்தலைச் சந்திக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அடிப்படைத் தேவைகளுக்காகத் தேர்தலை முடக்கும் மக்களின் இந்தப் போராட்டம் மாவட்ட நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!