சென்னை மெட்ரோ ரயிலில் அத்துமீறல்... சினிமா பாணியில் துரத்திப் பிடித்து வெளுத்த இளம்பெண்!

 
திருமங்கலம் மெட்ரோ

சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில், வீட்டுக்குச் செல்ல காத்துக் கொண்டு நின்றிருந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, 64 வயது முதியவர் ஒருவர் 'Flying kiss' கொடுத்துச் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட அந்த முதியவரை, துரத்திச் சென்று பிடித்த அந்த இளம்பெண் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், அண்ணா நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீட்டுக்குச் செல்வதற்காக, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் நின்றிருந்த முதியவர் ஒருவர், அந்த இளம் பெண்ணிடம் அநாகரிகமான முறையில், "நீ எங்கே செல்கிறாய்?" என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாக நின்றிருக்கிறார். இதையடுத்து, அந்த முதியவர் அந்தப் பெண்ணுக்கு 'Flying kiss' கொடுத்துச் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.

பாலியல் தொல்லை

இந்த அத்துமீறலை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண், உடனே சுதாரித்துக் கொண்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதற்குள் போதையில் இருந்த அந்த முதியவர் சென்னை சென்ட்ரல் நோக்கிச் செல்லும் மெட்ரோ ரயிலில் ஏறி விட்டார். முதியவர் தப்பிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அதே ரயிலில் ஏறிய அந்த இளம்பெண், முதியவரைத் தொடர்ந்து கண்காணித்தார். அண்ணா நகர் டவர் பார்க் ரயில் நிறுத்தத்தில் ரயில் நின்ற போது, துணிச்சலுடன் செயல்பட்ட அந்த இளம்பெண், முதியவரைப் பிடித்துக் கீழே இறக்கினார்.

ரயிலிலிருந்து இறக்கப்பட்ட அந்த முதியவருக்கு, அங்கிருந்த பொதுமக்களும், அந்த இளம்பெண்ணும் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பிறகு, அண்ணா நகர் ரோந்து காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். சம்பவம் நடந்தது திருமங்கலம் மெட்ரோ நிலையம் என்பதால், ரோந்து காவல்துறையினர் அந்த முதியவரை திருமங்கலம் காவல் நிலையத்திடம் ஒப்படைத்தனர். திருமங்கலம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசன் (64) என்பதும், திருமங்கலத்தில் ஒரு கடையில் டெய்லராகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

டெல்லி மெட்ரோ ரயில்

முதியவர் கணேசன் மீது  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் (பிரிவு 4), பி.என்.எஸ். 79 – சைகை அல்லது செயல் மூலம் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் என காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, முதியவர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் எந்த அளவிற்குத் தொடர்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!