சிவகாசி ஆணையூரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... தரைமட்டமான கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி!

தமிழகத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஒவ்வொரு வருடமும் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. இருந்தும் இது குறித்து அரசு தீவிர நடவடிக்கைகளையும், சோதனைகளையும், பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் மீண்டும் மற்றுமொரு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. சிவகாசி ஆணையூர் புது காலனியில் நீராத்தி லிங்கம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 80 ஆண் பெண் தொழிலாளர்கள் பட்டாசு ரகங்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்றாடம் தயாரிக்கப்படும் பட்டாசுகளை இருப்பு வைக்கும் அறையின் அருகே தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப் போது பட்டாசு மூலப் பொருள்களில் உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் வசித்து வந்த சுரேஷ்(33) எனும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே பகுதியில் வசித்து வரும் பால்பாண்டி (31) படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!