மும்பையில் ரூ.14.4 கோடியில் ஏழுமலையான் கோயில்... திருப்பதி தேவஸ்தான கூட்டத்தில் தீர்மானம்!
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தலைமையில் நேற்று (டிசம்பர் 16, 2025) அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்களின் நலன் மற்றும் கோயில் விரிவாக்கம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ராவில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.14.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி சிறுவர் இதய சிகிச்சை மருத்துவமனையை நவீனப்படுத்துவதற்காகக் கூடுதலாக ரூ. 48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 20 ஏக்கர் பரப்பளவில் ஓர் ஒருங்கிணைந்த நகரம் (Integrated Township) உருவாக்கப்பட உள்ளது. தேவஸ்தான கோயில்களுக்குத் தேவையான தேர்கள் மற்றும் கொடிமரங்கள் செய்வதற்குத் தேவையான மரங்களைப் பெற, சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் பிரத்யேகத் தோப்பு அமைக்கப்படும். புகழ்பெற்ற தலக்கோனா சித்தேஸ்வரர் கோயில் மராமத்துப் பணிகளுக்காக இரண்டாம் கட்டமாக ரூ.14.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலை மற்றும் மலைப்பாதையில் உள்ள பழமையான கோயில்களைப் பராமரிக்கத் தனிக்குழு அமைக்கப்பட உள்ளது.

தேவஸ்தான பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 60 பணியிடங்களை விரைவில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளிக்குக் கூடுதலாக 18 கண்காணிப்பாளர்களை நியமிக்க ஆந்திர அரசிடம் ஒப்புதல் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைத் தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாகத் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
