கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்... 4 குழந்தைகளை அனாதையாக்கிய கொடூரம்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில், குடும்பத்தையும் குழந்தைகளையும் மறந்து வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடியை, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த பின்னரும், அவர்களைச் சமாதானம் செய்து குடும்பத்துடன் சேர்த்து வைக்காமல், அவர்கள் விரும்பியபடி ஒன்றாகச் செல்ல சப்-இன்ஸ்பெக்டர் அனுமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காரணத்தால், அந்தத் தம்பதியினரின் 4 பிஞ்சுக் குழந்தைகள் ஆதரவின்றி பரிதவித்து நிற்கும் சோகம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 22). இவர் தன் தாய் மாமனையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோல், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா (24) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேடசந்தூரில் நடந்த திருவிழாவின் போது வைஷ்ணவியும், சூர்யாவும் சந்தித்துக்கொண்டனர். இவர்களின் பழக்கம் நாளடைவில் நட்பாக வளர்ந்து, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த நிலையில், இந்தக் கள்ளத்தொடர்பு குறித்து வைஷ்ணவியின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் பலமுறை கண்டித்தும், இருவரும் கள்ளத்தொடர்பை வளர்த்து வந்துள்ளனர். இதேபோல், சூர்யாவின் வீட்டிலும் இந்த விவகாரம் தெரிய வரவே அங்கு பெரிய தகராறு வெடித்தது.
இதனால், தங்கள் குடும்பத்தினரையும், நான்கு குழந்தைகளையும் மறந்துவிட்டு, கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்தனர். தங்கள் பிள்ளைகளைக் காணாமல் இருவரது குடும்பத்தினரும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், வேடசந்தூர் டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கள்ளக்காதல் ஜோடிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிய வரவே, அவர்களை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்குச் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
காவல் நிலையத்துக்கு வந்த தங்கள் மனைவி மற்றும் கணவரைக் கண்ட வைஷ்ணவி மற்றும் சூர்யாவின் குடும்பத்தினர், அவர்களை இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகக் குடும்பத்துடன் சேர்ந்து வாழுமாறும் கண்ணீருடன் மன்றாடி உள்ளனர். ஆனால், கள்ளக்காதல் ஜோடிகள் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியிடம் பேசிய வைஷ்ணவி, தனக்குக் கணவருடன் செல்ல விருப்பமில்லை என்றும், சூர்யாவுடனே செல்ல விரும்புவதாகவும் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, இரு குடும்பத்தினரையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் சற்றும் யோசிக்காமல், கள்ளக்காதல் ஜோடியை அங்கிருந்து ஒன்றாகச் செல்ல அனுமதித்து அனுப்பி வைத்துள்ளார். பொதுவாகக் குடும்ப நலப் பிரச்சினைகள் மற்றும் காணாமல் போனவர்கள் வழக்குகளில், குழந்தைகளைக் கருத்தில் கொண்டு குடும்பத்துடன் சேர்த்து வைப்பதுதான் போலீசாரின் வழக்கம். ஆனால், போலீசார் அவ்வாறு செய்யாமல் கள்ளக்காதலர்களை அனுப்பி வைத்தது இரு குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் இந்தச் செயலால், தற்போது 4 பிஞ்சுக் குழந்தைகளும் தாயின்றி, தந்தையின்றித் தவித்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. இது போன்ற குடும்ப நலப் பிரச்சினைகளில் போலீசாருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
