FIFA-விடம் ஈரான் அதிரடி கோரிக்கை... உலகக் கோப்பை போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வலியுறுத்தல்!
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் ஒரு பகுதியை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டும் என்று ஈரான் கால்பந்து கூட்டமைப்பு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இந்த உலகக் கோப்பையை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், ஈரானின் இந்தக் கோரிக்கை சர்வதேச விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தியே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகம் மார்ச் 16 அன்று தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் கடுமையான அரசியல் மற்றும் போர்ச் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தீவிரமான போர்ச் சூழலில், ஈரான் கால்பந்து வீரர்கள் அமெரிக்க மண்ணில் விளையாடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்று ஈரான் கருதுகிறது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து இந்த விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. அமெரிக்கா வரும் ஈரானிய கால்பந்து வீரர்களின் பாதுகாப்பிற்குத் தங்களால் எவ்வித உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தங்களை வரவேற்காத மற்றும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத ஒரு நாட்டிற்குத் தங்கள் வீரர்களை அனுப்ப ஈரான் விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவில் நடைபெற வேண்டிய தங்களின் ஆட்டங்களை, உலகக் கோப்பையை நடத்தும் மற்றொரு நாடான மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டும் என்பதே ஈரானின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.2026 உலகக் கோப்பைத் தொடரில் ஈரான் அணி தனது முதல் சுற்று ஆட்டங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் போன்ற அமெரிக்க நகரங்களில் விளையாட ஏற்கனவே அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. ஈரானின் இந்தப் புதிய கோரிக்கை குறித்து ஃபிஃபா நிர்வாகம் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஒருவேளை பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டால், அது உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக அமையும். போர்ச் சூழல் விளையாட்டுத் துறையை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
