எல்.ஐ.சி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: பெண் மேலாளர் உடல் கருகி பலி!
மதுரை ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள வணிகக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நேற்றிரவு அரங்கேறிய பயங்கரத் தீ விபத்து ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியுள்ளது. சுமார் 50 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அலுவலகத்தில், இன்று அறிமுகமாக இருந்த புதிய இன்சூரன்ஸ் பாலிசி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டம் முடிந்து ஊழியர்கள் கலைந்து செல்லத் தயாரான நிலையில், இரவு 8.30 மணியளவில் எதிர்பாராத விதமாகத் தீப்பிடிக்கத் தொடங்கியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அலுவலகத்தின் அனைத்து அறைகளுக்கும் பரவியது. கரும்புகை சூழ்ந்ததால் உள்ளே இருந்த ஊழியர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். தகவல் அறிந்து தல்லாகுளம் மற்றும் திடீர் நகர் பகுதிகளிலிருந்து விரைந்து வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரக் கடுமையாகப் போராடின. எனினும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.
இந்தத் துயரச் சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளரான கல்யாணி(55) என்பவர் தீயில் சிக்கி உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த உதவி நிர்வாக அதிகாரி ராம் என்பவர் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அலுவலகத்தில் இருந்த குளிரூட்டியில் (AC) ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. பரபரப்பான ரயில் நிலையப் பகுதியில் நடந்த இந்தத் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிய பாலிசி அறிமுகம் செய்ய வேண்டிய நாளில், உயர்மட்ட அதிகாரி ஒருவர் பலியான சம்பவம் எல்.ஐ.சி. ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
