இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன்பிடிக்க அனுமதி... தடைக்காலம் நிறைவு!

சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் பாம்பன், மண்டபம் கடல் பகுதிகளில் இன்று முதல் மீன் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000க்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாத காலமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ம் தேதி அன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், தடைக்கால சீசன் முடிவடைந்தாலும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து மீன்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று ஜூன் 17ம் தேதி மீன் துறை அலுவலகத்தில் முறையாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு செல்ல வேண்டும். மீன்பிடி அனுமதி டோக்கன் பெறாமல் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் பாதுகாப்பு மிதவை, உயிர் காக்கும் சட்டை, மீன்பிடி அனுமதிச்சீட்டு, படகின் ஆவண புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக முறையில் இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று விசைப்படகுகளில் படகுகளுக்கு தேவையான டீசல் மற்றும் மீன்களை பதப்படுத்த தேவைப்படும் ஐஸ்கட்டி உள்ளிட்ட பொருட்களை ஏற்றும் பணியில் மீனவர்கள் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் பாம்பன் மற்றும் கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள விசைப்படகு மீனவர்களுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் நாளை(புதன்கிழமை) காலை முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!