4,335 இந்திய விமானங்கள் அதிரடி ரத்து... அதிர்ச்சித் தகவல்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆறாவது நாளான இன்று, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு இது குறித்து மிக முக்கியமான புள்ளிவிவரங்களை வெளியிட்டார். போர்ச் சூழல் காரணமாக இதுவரை இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 4,335 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தவிர, வெளிநாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்பட வேண்டிய 1,187 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான்வழிப் பாதைகள் பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளதால், பயணிகளின் உயிரைப் பணயம் வைக்க அரசு தயாராக இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதைகளில் விமானங்களை இயக்குவது சவாலாக மாறியுள்ளது. போர் பதற்றம் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்திலும் சுமார் 2,19,780 பயணிகள் வான்வழிப் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (ATC) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகிய அமைப்புகள் போர் பாதிப்புக்குள்ளான நாடுகளின் அதிகாரிகளுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றன. வான்வெளிப் பாதைகள் மீண்டும் பாதுகாப்பாகத் திறக்கப்பட்டால் மட்டுமே விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

தற்போதைய சூழலில், பல நாடுகள் தங்களின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் சர்வதேசப் பயணங்களுக்கான நேரம் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் உயர்ந்துள்ளது. இது போன்ற இக்கட்டான காலங்களில் பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களின் முதல் முன்னுரிமை என்று கூறிய அமைச்சர், நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டார். துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கான பயணங்கள் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சரின் இந்த விளக்கம் விமானப் பயணிகளிடையே நிலவி வந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
