ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால்: பிளிப்கார்ட்டின் அதிரடி ஆபர்!
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), தனது விளம்பர உத்திகளில் ஒன்றாக ஒரு லிட்டர் பாலை வெறும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தாலும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (BAMUL) தலைவர் டி.கே. சுரேஷ், பிளிப்கார்ட்டின் இந்தச் செயல் விவசாயிகளின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவதாகவும், பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட பால் கூட்டுறவு அமைப்புகளைச் சீர்குலைப்பதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த ஒரு ரூபாய் பால் விற்பனைத் திட்டம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அவசர மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முதலீட்டாளர்களின் நிதியைக் கொண்டு இத்தகைய 'விலை குறைப்புப் போரில்' (Predatory Pricing) ஈடுபடுவது நியாயமற்றது என்றும், இது சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிளிப்கார்ட் மூலம் சுமார் 14.5 லட்சம் லிட்டர் பால் இத்தகைய குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகத் உள்ளூர் பால் கூட்டுறவுச் சங்கங்களின் தினசரி விற்பனை சுமார் 40,000 முதல் 50,000 லிட்டர் வரை குறைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்யவே 38 முதல் 42 ரூபாய் வரை செலவாகும் நிலையில், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது விவசாயிகளை அழிக்கும் செயல் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இந்தியப் போட்டி ஆணையத்திடம் (CCI) புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பிளிப்கார்ட் நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், இது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மதிப்பினை வழங்கும் ஒரு தற்காலிகமான விளம்பர யுக்தி மட்டுமே என்றும், இதனால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளதோடு, விவசாய சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் இத்தகைய அதிரடித் தள்ளுபடிகள் பாரம்பரிய விவசாயச் சந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
