வெள்ளப்பெருக்கு... திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் அருவியில் குளிப்பதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இது ஆன்மிக ரீதியாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில், வனப்பகுதிக்குள் இயற்கை எழில் சூழ்ந்த பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகும் ஆறுகள் மற்றும் ஓடைகள் நீர்வரத்தை அளிக்கின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த அருவிக்கு வந்து நீராடிவிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகப் பஞ்சலிங்க அருவிக்கு வரும் நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாகிக் கொண்டே வந்ததால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து அதிக வேகத்துடன் கொட்டுவதால், மக்கள் குளிப்பது ஆபத்தாக முடியலாம் என்ற அச்சுறுத்தல் நிலவியது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று (நவம்பர் 22) முதல் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளனர்.

சபரிமலை சீசன் மற்றும் வார விடுமுறைக்காகப் பஞ்சலிங்க அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும், குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். மலைப் பகுதியில் மழை சீராகி, அருவியில் நீர்வரத்து குறையும் பட்சத்தில், மீண்டும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து விரைவில் அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
