உலகத் தலைவர்களில் முதன்முறையாக... பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது... 130 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக எத்தியோப்பியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். தலைநகர் அடிஸ் அபாபா சென்ற அவருக்கு, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தார். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' (The Great Honor Nishan of Ethiopia) என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்குக் கிடைக்கப்பெற்ற 28வது உயரிய விருது இதுவாகும். பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.
எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலியுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும் தகவல் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்றவற்றில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவித்தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவெடுத்துள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

பன்முகத்தன்மையில் ஒற்றுமைக்கான அடையாளங்களாகவும், அமைதி மற்றும் மனித இன நலனுக்கான செயல்பாட்டில் ஈடுபடும் ஜனநாயகச் சக்திகளாகவும் இந்தியாவும் எத்தியோப்பியாவும் இருப்பதாக மோடி குறிப்பிட்டார். உயரிய விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, "இந்தியர்கள் அனைவரின் சார்பாக, இதனைப் பணிவுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார். உலகின் மிகத் தொன்மையான மற்றும் செழிப்பான நாகரிகம் கொண்ட நாட்டின் இந்த விருது, மிகச் சிறந்த பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார். இந்த அங்கீகாரம், இருதரப்பு நல்லுறவை வடிவமைக்க மற்றும் வலுப்படுத்திய எண்ணற்ற இந்தியர்களையே சேரும் என்று கூறி, இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
