வரலாற்றில் முதன்முறை... பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.302 கோடி ஈட்டி சாதனை!
தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை, அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் மிக முக்கியமான பங்க வகிக்கிறது. இந்த நிலையில், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் ரூ. 302 கோடி வருவாய் ஈட்டித் துறை சாதனை படைத்துள்ளது. சுபமுகூர்த்த நாள் காரணமாக ஆவணப் பதிவுகள் அதிகரித்ததால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு வரி வருவாய் ஈட்டித் தருவதில் பத்திரப்பதிவுத் துறையின் பங்கு மிக அதிகம். வீடு, நிலம் வாங்குவது, வீடுகட்டும் ஒப்பந்தங்கள், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்ற ஆவணங்களைப் பதிவு செய்யும்போது மக்கள் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவார்கள். இந்தக் கட்டணம் மூலமாகவே அரசின் கருவூலத்திற்குத் தேவையான அதிக வரி வருவாய் கிடைக்கிறது.

நேற்று டிசம்பர் 1ம் தேதி சுபமுகூர்த்த நாளாக இருந்தது தான் வரலாறு காணாத அளவுக்கு வருவாய் அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. கார்த்திகை மாத வளர்பிறை சுப முகூர்த்தம் என்பதும், அடுத்து மார்கழி மாதத்தில் பெரும்பாலும் பத்திரப்பதிவு செய்ய மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதும் தான் காரணமாக கூறப்படுகிறது.
சுபமுகூர்த்த தினங்கள் என நம்பப்படும் நாட்களில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த நாட்களில் ஆவணப்பதிவுக்காகக் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று அதிக டோக்கன்கள் வழங்கப்பட்டன.

கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு ஆவணப் பதிவுகள் நடைபெற்ற நிலையில், நேற்று (டிசம்பர் 1) ஒரே நாளில் பதிவுத்துறை ஈட்டிய வருவாய் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது. ஒரே நாளில் ரூ. 302 கோடி வருவாய் ஈட்டி, பதிவுத்துறை தனது வரலாற்றிலேயே புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தப் புதிய சாதனை, தமிழ்நாட்டின் பொருளாதார வலிமையையும், ரியல் எஸ்டேட் துறையின் செயல்பாட்டையும் பிரதிபலிப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் அரசுக்குக் கூடுதல் நிதி ஆதாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
