முன்னாள் மத்திய அமைச்சர் கபீந்திர புர்கயஸ்தா காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!
அசாம் மாநில பா.ஜ.க-வின் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட கபீந்திர புர்கயஸ்தா, வயது முதிர்வு மற்றும் நீண்டகால உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அசாமில் பா.ஜ.க-வை வேரூன்றச் செய்த மிக முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர். 1991-ம் ஆண்டு சில்சார் தொகுதியிலிருந்து முதன்முறையாக மக்களவைக்குதேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998-1999 காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சராக திறம்படப் பணியாற்றினார். 2009-ம் ஆண்டு மீண்டும் அதே சில்சார் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். இவரது எளிமையான அணுகுமுறையும், ஆழ்ந்த அரசியல் அறிவும் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டது.
வாஜ்பாய் காலத்தில் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதியாக அமைச்சரவையில் மிக முக்கியப் பங்கு வகித்தார். தொலைத்தொடர்புத் துறையில் அக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சில சீர்திருத்தங்களில் இவரது பங்கும் உண்டு. இவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். "அசாமில் பா.ஜ.க-வை வளர்த்தெடுத்த ஒரு மகத்தான வழிகாட்டியை இழந்து விட்டோம்" என அசாம் முதல்வர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
