போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு... மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைத் தளங்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களாலும், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச அளவில் நிலவி வரும் இந்தப் போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை அனைத்து மாநில முதல்வர்களுடன் அவசர ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு, வரப்போகும் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் விரிவாக ஆலோசிக்க உள்ளார். உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வரும் இந்தப் போர்ச் சூழலில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாகும்.

அதே சமயம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தற்போது சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாகத் தேர்தல் நடைபெறும் அந்த ஐந்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மட்டும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மற்ற மாநில முதல்வர்களுடன் மட்டும் பிரதமர் இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
