பெரும் சோகம்... மகாகவி பாரதியார் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. எட்டயபுரம் பேரூராட்சி 9வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மகாதேவி காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வீடு தமிழக அரசால் அரசுடமை ஆக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும்நிலையில், இங்கு பாரதியார் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் என பல வகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. இதனை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.

இந்த வீடில் பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், மார்ச் 26ம் தேதி மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடினார். இந்த நேரத்தில்தான், இந்த இல்லத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கீழ்தளமும் சேதமடைந்துள்ளது. அத்துடன் அங்கே வைக்கப்பட்டிருந்த மேசை, நாற்காலிகளும் சேதமடைந்துள்ளன. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் அவசரமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலின் பேரில்விரைந்து வந்த வட்டாட்சியர் சுபா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்பகுதியில் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டு அத்துடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியார் இல்லம் உட்பட 17 புராதன கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.1973ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லமாக மாற்றினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
