அரை கிலோமீட்டர் தூரம் 'மின்னல்' ஓட்டம்... குழந்தையின் உயிர் காத்த காவலருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
"காவல்துறை உங்கள் நண்பன்" என்ற வாசகத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பேச்சு, மூச்சில்லாமல் மரணத்தின் விளிம்பில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தி, மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று காப்பாற்றியுள்ளார் ஒரு காவலர்.
அன்பின் வழியது உயிர்நிலை
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 13, 2026
சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, "காவலர் பணி மனிதநேயத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும். வீரத்தின் அடித்தளம் அன்புதான்" என அறிவுறுத்தி இருந்தேன்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் குழந்தையின் உயிரைக்… https://t.co/zl6PPsw8bj
விருத்தாச்சலம் பெரியார் நகரைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை, விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தது. குழந்தையின் மூச்சு நின்று போனதைக் கண்டு அவரது தாய் அலறியபடி வீதியில் ஓடி வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பணியில் இருந்த தலைமை காவலர் சரவணன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகக் குழந்தையைத் தனது கைகளில் வாங்கிக் கொண்டார். வாகனம் வருவதற்குக்கூடக் காத்திருக்காமல், சுமார் அரை கிலோமீட்டர் தூரம் குழந்தையைச் சுமந்தபடி மருத்துவமனையை நோக்கிப் பாதரசமாய் ஓடினார். அந்த நிமிடங்கள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது. உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதால், அந்தக் குழந்தை தற்போது உயிர் பிழைத்துள்ளது.

இந்தச் செய்தியைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது எக்ஸ் (X) தளத்தில் காவலர் சரவணனை மனதாரப் பாராட்டியுள்ளார். "வீரத்தின் அடித்தளம் அன்புதான்! சில நாட்களுக்கு முன் நான் காவலர்களுக்கு அறிவுறுத்திய மனிதநேயத்தை மெய்ப்பிக்கும் வகையில், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் சரவணன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்!" என முதல்வர் பதிவிட்டுள்ளார். கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களும் சரவணனை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
