அனுமன் ஜெயந்தி, வார விடுமுறை... தமிழகம் முழுவதும் 570 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!
வார இறுதி நாட்கள் மற்றும் நாளை (டிசம்பர் 19) கொண்டாடப்படவுள்ள அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார விடுமுறை நாட்களில் வழக்கமாகவே கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கத் திட்டமிட்டு இந்தப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையத்திலிருந்து மட்டும் நாளை (வெள்ளிக்கிழமை) 240 பேருந்துகளும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 255 பேருந்துகளும் என மொத்தம் 495 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை போன்ற முக்கிய நகரங்களுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும்.

அதேபோல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மொத்தம் 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் வட மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக மொத்தம் 20 சிறப்புப் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.வெளியூர் சென்ற பயணிகள் மீண்டும் வார இறுதியில் சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக, ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. கடைசி நேரக் கூட்டத்தைத் தவிர்க்கவும், இருக்கைகளை உறுதி செய்யவும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
