1,142 போட்டிகளில் 900 கோல்கள்... இளம் வயதில் மெஸ்ஸி உலக சாதனை!
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் லியோனல் மெஸ்ஸி, மிகக் குறைந்த போட்டிகளில் 900 கோல்களை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரும் 38 வயதான மெஸ்ஸி, கான்காகேஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாஷ்வெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டினார். போட்டியின் 7வது நிமிடத்திலேயே எதிரணி வீரர்கள் சூழ்ந்திருந்த நிலையிலும், மிகக் குறுகிய இடத்தைப் பயன்படுத்தி அவர் அடித்த மின்னல் வேக கோல் ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சாதனையின் மூலம் தனது பரம எதிரியான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார். ரொனால்டோ 1,236 போட்டிகளில் 900 கோல்களை அடித்திருந்த நிலையில், மெஸ்ஸி வெறும் 1,142 போட்டிகளிலேயே இந்த இலக்கை எட்டி 'அதிவேக வீரர்' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, 39 வயதில் ரொனால்டோ எட்டிய இந்தச் சாதனையை, மெஸ்ஸி 38 வயதிலேயே எட்டி 'குறைந்த வயதில் 900 கோல்கள்' அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

பார்சிலோனா அணிக்காக 672 கோல்கள், ஆர்ஜென்டீனா தேசத்திற்காக 115 கோல்கள் எனத் தனது கால்பந்து பயணத்தில் கோல் மழையைப் பொழிந்து வரும் மெஸ்ஸிக்கு விளையாட்டுப் பிரபலங்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். கடந்த சீசனில் மதிப்புமிக்க வீரர் விருது மற்றும் தங்கக் காலணி விருதுகளை வென்ற மெஸ்ஸி, தற்போது இன்டர் மியாமி அணியை எம்எல்எஸ் கோப்பை வெற்றியாளராக மாற்றியதோடு, தனிநபர் சாதனைகளிலும் சிகரம் தொட்டுள்ளார். மெஸ்ஸியின் இந்த அசுர வேக வளர்ச்சி கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
