நெஞ்சை உலுக்கும் கொடூரம்... 4 மாத குழந்தையின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் சுமந்து பேருந்தில் பயணித்த தந்தை!

 
பை பழங்குடியினர்

நவீன உலகில் மனிதநேயம் மரித்துப் போனதை உறுதிப்படுத்தும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு தந்தைக்கு நேர்ந்த துயரம் ஒட்டுமொத்த தேசத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. ஜார்க்கண்டின் சாய்பாசா சதார் அரசு மருத்துவமனையில், போதிய வாகன வசதி கிடைக்காததால், தனது நான்கு மாதக் குழந்தையின் சடலத்தைப் பிளாஸ்டிக் கவரில் சுற்றிப் பேருந்தில் எடுத்துச் சென்ற பழங்குடியினத் தந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டிம்பா என்ற பழங்குடியின இளைஞர், தனது 4 மாதக் குழந்தைக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சாய்பாசா சதார் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. துக்கத்தில் நிலைகுலைந்த டிம்பா, தனது குழந்தையின் உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் மன்றாடியுள்ளார்.

குழந்தை வாயில் டேப்

மணி கணக்கில் காத்திருந்தும் மருத்துவமனை அதிகாரிகள் அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்து தரவில்லை. டிம்பாவின் பாக்கெட்டில் வெறும் 100 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்கப் பணமில்லாத நிலையில், வேறு வழியின்றி அருகிலிருந்த கடையில் 20 ரூபாய் கொடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரை வாங்கினார். அதில் தனது மகனின் உடலை வைத்து மூடிய அவர், மீதமிருந்த பணத்தில் சாய்பாசாவிலிருந்து நோமுண்டி செல்வதற்குப் பேருந்து டிக்கெட் எடுத்துப் பயணித்தார். பேருந்தில் மற்ற பயணிகளுக்குத் தெரியாமல், தனது குழந்தையின் உடலைப் பையில் சுமந்தபடி அவர் சென்ற காட்சி மனிதநேயமற்ற அதிகார வர்க்கத்தின் முகத்தில் அறைவது போல் இருந்தது.

குழந்தை

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மருத்துவமனை அதிகாரிகள், "ஆம்புலன்ஸ் வேறு ஒரு பணிக்குச் சென்றிருந்ததால் அவரை இரண்டு மணி நேரம் காத்திருக்கச் சொன்னோம், அதற்குள் அவர் கிளம்பிவிட்டார்" எனத் தங்களைக் காத்துக்கொள்ள மழுப்பலாகப் பதில் கூறினர். இருப்பினும், ஒரு ஏழைத் தந்தையைச் சடலத்துடன் காக்க வைத்தது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. இது குறித்துத் தகவல் அறிந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் இர்பான் அன்சாரி, இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் உயிருக்கும், உணர்வுகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் மதிப்பில்லை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!