கடும் பனிமூட்டம்... ஒரே நாளில் 152 விமானங்கள் ரத்து - முடங்கியது வான்வழிப் போக்குவரத்து!
நாட்டின் தலைநகரான டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர், அடர் பனிமூட்டம் மற்றும் மிக மோசமான காற்று மாசு காரணமாக வான்வழிப் போக்குவரத்து இன்று முற்றிலும் நிலைகுலைந்தது. இன்று காலை முதலே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடர்த்தியான பனிப்போர்வை போர்த்தியது போலக் காட்சியளித்ததால், ஓடுதளத்தில் பார்வைத்திறன் (Visibility) மிகக் குறைவாகவே இருந்தது. இதன் விளைவாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டிய ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 152 விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான நிலைய அதிகாரப்பூர்வ தகவலின்படி, டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 79 விமானங்களும், டெல்லிக்கு வருகை தர வேண்டிய 73 விமானங்களும் என மொத்தம் 152 சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிமூட்டம் காரணமாக விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது. வானிலை ஓரளவிற்குச் சீரான பிறகு, ஓடுதளப் பார்வைத்திறன் அளவைப் பொறுத்து விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மட்டுமின்றி, டெல்லியில் காற்று மாசும் அபாயகரமான அளவைத் தாண்டியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்திலேயே சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்லும் அவலநிலை நீடிக்கிறது. விமான சேவைகள் மட்டுமின்றி, டெல்லி நோக்கி வரும் பல ரயில்களும் பல மணி நேரம் தாமதமாக இயங்கி வருகின்றன. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகள் தங்களது பயணத் திட்டங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
