கனமழை.. சூறைக்காற்று.. நெல்லையில் 1.50 லட்சம் வாழை மரங்கள் நாசம்!
புயல் சின்னம் வலுப்பெற்றுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக நெல்லைமாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 1.50 லட்சம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் இந்தியப் பெருங்கடல், குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்க்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி, மேலச்செவல், பிராஞ்சேரி, சொக்கலிங்கபுரம், கோபாலசமுத்திரம் போன்ற பகுதிகள் பிரதானமாக விவசாய நிலங்களைக் கொண்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை மரங்களைப் பயிரிட்டுள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழையால் வாழை பயிர்கள் நன்கு வளர்ந்து, அடுத்த சில வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இந்நிலையில்திருநெல்வேலி மாவட்டத்தில் திடீரெனச் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. காற்றானது அதிக வேகத்துடன் வீசியதால், அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைத் தோட்டங்களில் இருந்த மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்தன.

சீரான நிலையில் நின்றிருந்த வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்ததால், ஒட்டுமொத்தப் பயிர்களும் வீணாகிப் போயின. விவசாயிகள் நடத்திய ஆய்வில், சுமார் 1.50 லட்சம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பயிர்கள் அனைத்தையும் நம்பியிருந்த விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடங்களை விவசாயிகள் சோகத்துடன் பார்வையிட்டனர். தங்கள் கண்முன்னே மொத்த உழைப்பும் வீணானதைக் கண்டு அவர்கள் கண்ணீர் மல்கினர். தொடர்ச்சியாக மழையால் பயிர்கள் சேதமடைவது குறித்து வேதனை தெரிவித்த விவசாயிகள், “சூறைக்காற்றால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம். இந்தப் பேரிழப்பிலிருந்து எங்களைக் காப்பாற்ற, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
