கனமழை: இயல்பு வாழ்க்கை முடக்கம்... 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தேர்வுகள் ஒத்தி வைப்பு!
'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகர்ந்து வருவதால், வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) 4 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (புதன்கிழமை) முதல் 5ம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர் கனமழை எச்சரிக்கை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
