கடும் பனிப்பொழிவு... ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540க்கு விற்பனை!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ உற்பத்தி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சந்தையில் மல்லிகைப் பூவின் விலை வரலாறு காணாத உச்சமாக ஒரு கிலோவுக்கு ரூ. 2,540 என்ற விலையை எட்டியுள்ளது.
சத்தியமங்கலம், பவானிசாகர், தொட்டம்பாளையம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகைப் பூ சாகுபடி பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சாகுபடிப் பகுதி முழுவதும் பனிப்பொழிவின் பிடியில் சிக்கியதால், மகசூல் வெகுவாகச் சரிந்துள்ளது. வழக்கமாகச் சராசரியாக 1,000 கிலோவாக இருந்த மல்லிகைப் பூவின் வரத்து, தற்போது ஒரேயடியாகச் சரிந்து 100 கிலோவாகக் குறைந்துள்ளது.

சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், பூக்களின் வரத்துக் குறைவின் காரணமாக வியாபாரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு பூக்களை ஏலம் எடுத்தனர். இதனால் மல்லிகைப் பூவின் விலை ரூ.1,740-இல் இருந்து ரூ.2,540 ஆக உயர்ந்தது. இதேபோல, முல்லைப் பூவின் விலை கிலோ ரூ.860-இல் இருந்து ரூ.1,200 ஆகவும், அரளிப் பூவின் விலை ரூ.190-இல் இருந்து ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது.

தற்போது முருகர், ஐயப்பன், மற்றும் ஆதி பராசக்தி பக்தர்கள் விரதம் இருந்து கோவில்களுக்குச் செல்லும் காலம் என்பதால், சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த தேவையும், உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும் இணைந்து விலையைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் விளையும் மல்லிகைப் பூக்களுக்கு மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களிலும் வரவேற்பு இருப்பதால், இங்குள்ள பூக்கள் விமானம் மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
