பெரும் சோகம்... 270 பேர் பலியான விமான விபத்து குறித்த விசாரணை ... இன்று கூடுகிறது உயர்மட்டக்குழு!

அகமதாபாத் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 12 ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விமானம் பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்டு, 1:38 மணியளவில் இருந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், ஒரு கனடியர், மற்றும் 7 போர்ச்சுகீசியர்கள் . இந்த பயங்கர விபத்தில் முதற்கட்டமாக விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரிக்க, மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்று ஜூன் 16ம் தேதி திங்கட்கிழமை கூடி, விபத்துக்கான காரணங்களை ஆராயவுள்ளது. இதில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். குழு, விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகளை ஆய்வு செய்து, விமானிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டக்குழு, எதிர்காலத்தில் விமான விபத்துகளைத் தடுக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கும். விமான நிலையங்களில் தொழில்நுட்ப மேம்பாடு, விமானிகளுக்கு கடுமையான பயிற்சி, மற்றும் விமான பராமரிப்பு தரத்தை உயர்த்துவது போன்ற பரிந்துரைகள் விவாதிக்கப்படலாம். இந்தியாவில் விமானப் பயணம் வேகமாக அதிகரித்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் முக்கியமாகும். குழு விரைவில் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 80 பேரின் உடல்கள் DNA பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 33 உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!