கொடூரம்... காவல் நிலையத்திற்குள்ளேயே இரட்டைக் கொலை - காதலர்களுக்கு ஆதரவாகப் பேசிய இருவர் குத்திக் கொலை!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றின் வளாகத்திலேயே, காதல் ஜோடிக்கு ஆதரவாகப் பேசிய இரண்டு பேர் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கண்முன்னேயே இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியைச் சேர்ந்த நந்தீஸ் (25) மற்றும் சிருஷ்டி (22) ஆகிய இருவரும் ஒரேப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதலை இரு குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்ததால், காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காதல் ஜோடி பத்ராவதி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்த இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக காவல் நிலைய வளாகத்திற்கு வந்துள்ளனர். காவல் நிலைய வளாகத்தில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென ஆவேசமடைந்தனர்.
அவர்கள் நந்தீசுக்கு ஆதரவாகப் பேசிய அவரது உறவினர்களான கிரண் (25) மற்றும் மஞ்சுநாத் (65) ஆகிய இருவரையும் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினர். கண்முன்னே நடந்த இந்தத் தாக்குதலைப் போலீசார் தடுக்க முயன்றும் முடியவில்லை. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
