திருப்பூரில் கொடூரம்... பிளஸ்-1 மாணவியைக் கர்ப்பமாக்கிய கூரியர் ஊழியர்!
திருப்பூரில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மணிகண்டன், அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறி வலையில் வீழ்த்தியுள்ளார்.

மாணவியிடம் தான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய மணிகண்டன், அவரிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியான அந்த மாணவிக்கு இதன் விபரீதம் தெரியாத நிலையில், மணிகண்டனின் பேச்சை நம்பி ஏமாந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த மாணவிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர், அவரை சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், இது குறித்து மாணவியிடம் விசாரித்தபோது மணிகண்டன் செய்த துரோகம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தாயார் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டனைத் தேடி வந்தனர். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்பதால், இந்த வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றிய போலீசார், மணிகண்டனை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான வாலிபரிடம் விசாரணை நடத்திய பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
