வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை... ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஏப்ரல் 6 முதல் 8 வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியான ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 5.25 சதவீதமாகவே தொடரும் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய நிதியாண்டின் முதல் கூட்டத்திலேயே வட்டி விகிதத்தை உயர்த்தாமல் ரிசர்வ் வங்கி சமநிலையைப் பேணியுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் தவணைகளில் பெரும் சுமையை ஏற்படுத்தாது என்பதால் நிம்மதியைத் தந்துள்ளது.

தற்போது நிலவி வரும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி இந்த எச்சரிக்கையான நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை வட்டி விகிதங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலையே நீடிக்கிறது. வரும் 2026-2027 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதே ரிசர்வ் வங்கியின் முதன்மை நோக்கமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

உலக சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதையும் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய வங்கி தொடர்ந்து எடுக்கும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். உணவுப் பொருட்களின் விலை மற்றும் பணவீக்க அபாயங்கள் இன்னும் நீடிப்பதால், பொருளாதார வளர்ச்சி பாதிக்காத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் உலகளாவிய சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே வட்டி விகிதத்தில் மேற்கொண்டு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
