65 ஏக்கரில் பிரம்மாண்டம்... சென்னை வொண்டர்லாவில் 40% கட்டண சலுகை.. முழு விபரம்!
நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வொண்டர்லா (Wonderla) பொழுதுபோக்கு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், கட்டண சலுகை பெறும் முறை குறித்து தெரிஞ்சுக்கோங்க. அதற்கு முன்னால், என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூரை அடுத்துள்ள இள்ளளூரில் அமைந்துள்ளது வொண்டர்லா பூங்கா. மொத்தம் ரூ.611 கோடி செலவில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி பொழுதுபோக்கு பூங்காவான "வொண்டர்லா" ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது தென் இந்தியாவில் அதன் ஐந்தாவது கிளையாகச் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

வொண்டர்லா பூங்காவில் பல்வேறு வயதுடையோரை மகிழ்விக்கும் விதமாக உலகத்தரம் வாய்ந்த சவாரிகள் உள்ளன: இதில் பெரியவர்களுக்காக மொத்தம் 42 சவாரிகள் உள்ளன. இதில் 16 சவாரிகள் நீர் சவாரிகள் (Water Rides) ஆகும். 'பொலிகர்', 'மாபில்லார்ட்' உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த சவாரிகளும் இதில் அடங்கும். குழந்தைகளுக்கெனப் பிரத்யேகமாக 10 சவாரிகள் என மொத்தம் 52 சவாரிகள் இந்த வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வொண்டர்லாவில் டிக்கெட் விலை வார நாட்களில் ரூ.1536 ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.1826 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரொம்பவே அதிகம் என நினைப்பவர்களுக்கு அட்டகாசமான ஒரு சலுகை இருக்கிறது. அதாவது பிளாக் பிரைடே என்ற ஆஃபர் விற்பனையை வொண்டர்லா அறிவித்திருந்தது. இதன் கீழ் ஒருவர் சலுகை விலையில் வொண்டர்லாவுக்கு செல்லலாம். இதன் கீழ் வார நாட்களுக்கான டிக்கெட்டை ரூ.1100க்கும் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் ரூ.1226க்கு கிடைக்கும். வழக்கமான டிக்கெட் ரேட்டை விட கிட்டத்தட்ட 40% வரை விலை குறைகிறது.

எப்படி புக் செய்வது?
இந்தச் சலுகை ரேட்டில் டிக்கெட் வாங்குவது ரொம்பவே ஈஸி. முதலில் வொண்டர்லாவின் அதிகாரப்பூர்வத் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு Book tickets என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் சென்னை வொண்டர்லா என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். எந்த தேதியில் செல்ல விரும்புகிறீர்களோ.. அந்தத் தேதியைத் தேர்வு செய்து அடுத்த பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு Black Friday tickets என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் சென்று டிக்கெட்டை புக் செய்வதன் மூலம் 40% வரை சலுகையைப் பெறலாம். மார்ச் 31ம் தேதி வரை எந்தவொரு நாளுக்கும் இந்தச் சலுகை டிக்கெட்டை பெறலாம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
