காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவன் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, கணவர் வேறொரு பெண்ணுடன் பழகியதால் ஏற்பட்டச் சந்தேகத்தின் விளைவாக, தன் மனைவி மீது டீசல் ஊற்றிக் கொளுத்திய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட கணவரைப் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (28), சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு அதேப் பகுதியைச் சேர்ந்த பிரேமா (24) என்றப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கணவர் ஆதித்யன் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாகக் கூறப்பட்டதால், அவரது நடவடிக்கையில் மனைவி பிரேமா சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக, கணவன்-மனைவி இடையே அடிக்கடி கடுமையான தகராறு ஏற்பட்டு வந்தது.

வழக்கம் போல் நேற்று தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஆதித்யன், வீட்டிலிருந்த டீசலை எடுத்து மனைவி பிரேமாவின் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். பலத்தக் காயமடைந்த பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிரேமாவுக்கு, 70% காயங்களுடன் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த குத்தாலம் போலீஸார், மருத்துவமனையில் பிரேமா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கணவர் ஆதித்யன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பந்தப்பட்ட ஆதித்யனைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டச் சந்தேகத்தால் ஒரு குடும்பமே சிதைந்துபோன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
