ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கும் போது ஐஏஎஸ் அதிகாரி கைது!
ஒடிசா மாநிலம், கலஹாண்டி மாவட்டத்தில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கும் போது ஐஏஎஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஒடிசாவில் கலஹாண்டி மாநிலம், தரம்கரில் ஐஏஎஸ் அதிகாரி திமான் சக்மா லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், இந்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரி திமான் சக்மாவை கையும் களவுமாகப் பிடிப்பதற்கு முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த மே 8ம் தேதி இரவு தரம்கரில் உள்ள அரசு குடியிருப்பில் ஐஏஎஸ் அதிகாரி திமான் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.10லட்சம் லஞ்ச பணமாக பெற்றார். அப்போது தொழிலதிபர் முன்னிலையிலேயே ஐஏஎஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ஐஏஎஸ் அதிகாரியிடம் இருந்த ரூ.10லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலத்தில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்த ரூ.47லட்சம் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
