"லஞ்சம் வாங்கலன்னா கம்ப்ளைன்ட் பண்ணுவேன்!" - போலீசாரை மிரட்டிய நபர்... தீயாய் பரவும் வீடியோ!
காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைப் படம் பிடித்துப் புகாரளிக்கும் காலமிது. ஆனால், "ஏன் லஞ்சம் வாங்க மறுக்கிறீர்கள்?" என போலீசாரையே மிரட்டிய ஒரு வினோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனைத் தொலைத்துவிட்டு, பதற்றத்தில் '112' என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் அந்த நபருக்குத் தனது போன் கிடைத்துவிட்டது. வந்த போலீசாரிடம் போன் கிடைத்துவிட்ட தகவலை அவர் அப்பாவியாகத் தெரிவிக்க, "சரி, போன் கிடைத்துவிட்டது அல்லவா, நாங்கள் கிளம்புகிறோம்" என போலீசார் கூறினர்.
போலீசார் வந்த வேகத்தைப் பார்த்து வியந்த அந்த நபர், அவர்களுக்கு வெகுமதியாக ₹500 கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால் போலீசாரோ, "இது 112 இலவச சேவை. இதற்காகப் பணம் வாங்கக் கூடாது" என நாசூக்காக மறுத்துள்ளனர். ஆனால் அந்த நபர் விடுவதாக இல்லை. "சார், சந்தோஷத்துல தர்றேன், வாங்கிக்கோங்க" என வற்புறுத்தியுள்ளார்.
போலீசார் பிடிவாதமாக மறுக்கவே, அந்த நபர் ஒரு படி மேலே போய், "பணத்தை வாங்கிக்கோங்க சார்.. இல்லன்னா லஞ்சம் வாங்க மறுக்குறீங்கன்னு உங்க மேலதிகாரிகிட்ட புகார் கொடுத்துடுவேன்!" என்று வேடிக்கையாக மிரட்டத் தொடங்கினார்.
இதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியாமல் திகைத்துப் போயினர். இந்த வேடிக்கையான உரையாடலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர, அது தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
"பணம் வாங்கினாலும் பிரச்சனை, வாங்கலன்னாலும் பிரச்சனையா?" என ஒரு பயனர் கிண்டலாகக் கேட்டுள்ளார். "இதுக்கு பேரு 'கட்டாய லஞ்சம்' போலிருக்கு" என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் குற்றச்சாட்டுகளிலும், வழக்குகளிலும் சிக்கித் தவிக்கும் காவல்துறைக்கு, இதுபோன்ற சில வேடிக்கையான சம்பவங்கள் ஒரு மாற்றாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
