"முஸ்லிம் பெண்களைத் தவறாகத் தொட்டால் கை வெட்டப்படும்!" - ஹிஜாப் அகற்றிய விவகாரத்தில் இம்தியாஸ் ஜலீல் கடும் எச்சரிக்கை!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை அகற்றிய விவகாரமும், அது தொடர்பாக உ.பி. அமைச்சர் தெரிவித்த கருத்தும் தற்போது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இம்தியாஸ் ஜலீல் ஆவேசமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் பீகாரில் நடந்த அரசு விழாவொன்றில், பணி நியமன ஆணை வழங்கியபோது அங்கிருந்த பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ் குமார் பலவந்தமாக அகற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் செயலுக்கு ஆதரவாகப் பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், "அவர் அந்தப் பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் நடந்த மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய இம்தியாஸ் ஜலீல், அமைச்சரின் அந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். "எங்கள் முஸ்லிம் சகோதரிகளை எவராவது தவறான எண்ணத்துடன் தொடும் துணிச்சல் கொண்டால், அவரது கையை வெட்ட நான் தயங்க மாட்டேன்."
தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகள், ரவுடிகளுக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் ஆதரவு அளிக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் வழங்க அஞ்சுகின்றன.

முஸ்லிம்கள் தலைவர்களாக உருவெடுப்பதை மற்ற கட்சிகள் விரும்புவதில்லை. எம்.ஐ.எம். கட்சியை வகுப்புவாதக் கட்சி என முத்திரை குத்துபவர்கள்தான் உண்மையில் மிகப்பெரிய வகுப்புவாதிகள் என அவர் சாடினார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இம்தியாஸ் ஜலீலின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தரப்பினர் இது பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான பேச்சு என்று ஆதரித்தாலும், மற்றொரு தரப்பினர் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
