ஒரு போன் காலில் போரை நிறுத்துவேன்... ட்ரம்ப் மீண்டும் பேச்சு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மீண்டும் முற்றியுள்ள எல்லை மோதலைத் தன்னுடைய 'ஒரு போன் அழைப்பில்' நிறுத்தி விடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றபோது, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே உள்ள 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கோவில் தங்களுக்குச் சொந்தமானது என்று இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதி வருகின்றன. கடந்த ஜூலையில் இந்த மோதல் முற்றியபோது, 48 பேர் கொல்லப்பட்டனர், 3 லட்சம் பேர் அகதிகளாகினர். அப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை மூலம் 5 நாள் போரைத் தீர்த்து வைத்ததுடன், அக்டோபரில் அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஆனால், கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் தங்கள் வீரர் காயமடைந்ததாகக் கூறி, தாய்லாந்து நவம்பரில் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. டிசம்பர் 8 அன்று மீண்டும் மோதல் வெடித்ததில் 8 வீரர்கள் பலியாகினர்.
இந்தப் புதிய மோதல் குறித்துப் பேசிய டிரம்ப், "கம்போடியா-தாய்லாந்து மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டதை அறிவேன். அதெல்லாம் ஒரு போன் அழைப்பில் பிரச்சினையைத் தீர்த்துவிடுவேன். கடந்த 10 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் போரை நிறுத்திவிட்டேன். இதெல்லாம் எனக்கு சாதாரண விஷயம்," என்று தெரிவித்தார்.

மேலும், "நம்மிடம் உள்ள அதீத சக்தியை (வரிவிதிப்பு) பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதித்துவிடுவேன்," என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதலைத் தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக டிரம்ப் நேற்றுடன் 70-வது முறையாகக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
