ரஷ்யா, ஜப்பானிடம் இருந்து காஸ் இறக்குமதி ... இந்தியா அதிரடி!
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு வர வேண்டிய எல்பிஜி கப்பல்கள் நடுக்கடலில் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவின் மொத்த எல்பிஜி தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் திடீர் தட்டுப்பாட்டைப் போக்க ஒன்றிய அரசு தற்போது மாற்று நாடுகளை நாடியுள்ளது.

அதன்படி, ரஷ்யா மற்றும் ஜப்பானிடம் இருந்து பெருமளவிலான எல்பிஜி-யை இறக்குமதி செய்ய ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த நாடுகளில் இருந்து எல்பிஜி ஏற்றிய பிரம்மாண்ட கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, அமெரிக்காவிடம் இருந்தும் கூடுதல் எரிவாயுவை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வணிக ரீதியிலான பயன்பாட்டை விட வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் 90 சதவீத எல்பிஜி இறக்குமதி வளைகுடா நாடுகளைச் சார்ந்தே இருந்த நிலையில், இந்தப் போர்ச் சூழல் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் உதவியுடன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. "மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்ய எங்கெல்லாம் எரிவாயு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் செல்ல இந்தியா தயங்காது" என அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத வருகைக்குப் பிறகு, தற்போது நிலவும் சிலிண்டர் முன்பதிவு தாமதம் மற்றும் தட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
