இம்ரான் கான் நலமுடன் உள்ளார்... 'மறைவு' குறித்த வதந்திகளுக்கு சிறைத் துறை அதிகாரிகள் விளக்கம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) சிறையில் இருக்கும்போது, அவரது உடல்நிலை குறித்தும், இறப்பு குறித்தும் சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவிய வதந்திகளுக்குப் பாகிஸ்தான் சிறைத் துறை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அடியாலா சிறை நிர்வாகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை என்று சிறைத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். "முன்னாள் பிரதமர் இம்ரான் கான் முழு நலத்துடன் உள்ளார். இதுகுறித்து அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி தலைமையிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது."

சிறையில் இம்ரானுக்குத் தேவையான அனைத்துப் பராமரிப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவரது உடல்நிலை குறித்துப் பரவும் வதந்திகளில் துளியும் உண்மையில்லை. மேலும், இம்ரான் கான் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக வரும் தகவல்களும் அடிப்படை அற்றவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை காலை, எக்ஸ் (X) தளத்தில் பலர் இம்ரானின் இறப்பு குறித்த உறுதிப்படுத்தப்படாத பதிவுகளைப் பகிர்ந்தனர். 'எங்கே இம்ரான் கான்' என்ற வாசகம் சமூக ஊடகங்களில் பிரபலமானது. இதன் தொடர்ச்சியாகவே சிறைத் துறை விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது.
கடந்த ஆறு வாரங்களாக இம்ரான் கானின் மூன்று சகோதரிகளும் அவரைச் சந்திப்பதற்குச் சிறை அதிகாரிகள் மறுத்துவந்தனர். இதனால் அவர் அங்குதான் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்ததால், அடியாலா சிறைக்கு வெளியே அமர்ந்து அவர்கள் போராட்டமும் நடத்தினர். இந்த நிகழ்வே வதந்திகள் பரவத் தூண்டுகோலாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதற்குப் பிறகு, இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இம்ரான் கானை யாரும் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள அறிவிக்கப்படாத தடையை நீக்க வேண்டும் என்றும், உடனடியாக அவரது குடும்பத்துடன் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிடிஐ வலியுறுத்தியுள்ளது.
"இம்ரான் கானின் உடல் நிலை குறித்து நிச்சயமின்மை நிலவுவதை நாடு சகித்துக் கொள்ளாது. அவரது பாதுகாப்பு, மனித உரிமை, அரசியல் உரிமைகளுக்குப் பாகிஸ்தான் அரசே நேரடி பொறுப்பு" என்றும் அந்தக் கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
