தமிழகத்தில் ரூ.3,600 கோடி சும்மா கிடக்கு... யாருமே கேட்கலை... ரிசர்வ் வங்கி தகவல்!
தமிழ்நாட்டில் வங்கிக் கணக்குகள் மற்றும் வைப்புத் தொகைகளில், உரிமையாளர்கள் மற்றும் வாரிசுகளால் கோரப்படாமல், சுமார் 3,600 கோடி ரூபாய் வரை 'அனாமத்தாக' முடங்கிக் கிடப்பதாக ரிசர்வ் வங்கியின் (RBI) சென்னை மண்டலப் பொது மேலாளர் ராஜ்குமார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தப் பணத்தை மக்கள் எளிதாக மீட்கும் வகையில் நாடு முழுவதும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 'உரிமை கோரப்படாத டெபாசிட் முகாம்' நிகழ்ச்சியில் பேசிய ராஜ்குமார், தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 1.33 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.3,600 கோடி வரை உரிமை கோரப்படாத பணமாக உள்ளது என்று தெரிவித்தார்.

வெறும் வேலூர் மாவட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 2.80 லட்சம் கணக்குகளில் ரூ.80 கோடி வரை கோரப்படாத பணம் உள்ளது என்றும், இதில் இதுவரை ரூ.1 கோடி வரை திருப்பி வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் மக்கள் வைத்திருக்கும் வைப்புத்தொகை, 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் அல்லது கோரப்படாமல் இருந்தால், அது 'உரிமை கோரப்படாத வைப்பு' என வகைப்படுத்தப்படுகிறது. இந்தப் பணம் தானாகவே ரிசர்வ் வங்கியின் DEAF (வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி) என்ற நிதிக்கு மாற்றப்பட்டுவிடும்.

கணக்கு வைத்திருப்பவர் நீண்ட நாட்களாக வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாமல் விடுவது, வங்கியை மாற்றுவது, கணக்குதாரர் இறந்த பிறகு குடும்பத்தினருக்குத் தகவல் தெரியாமல் இருப்பது, முகவரி மாற்றம், ஆவணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் இந்தப் பணம் முடங்குகிறது.
இந்த முடங்கிக் கிடக்கும் பணத்தை அதன் உரிமையாளர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் எளிதாக மீட்டுக் கொள்ளும் வகையில், நாடு முழுவதும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை முகாம்களை நடத்தி வருகின்றன.
உரிமை கோரப்படாத பணத்தைத் தேட, அனைத்து வங்கிகளின் இணையதளத்திலும் வசதி உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள UDGAM Portal (https://udgam.rbi.org.in) மூலமாக ஒரே இடத்தில் இருந்து பல வங்கிக் கணக்குகளில் உள்ள தொகையை மக்கள் எளிதாக அணுகி, மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
